தமிழக முதல்வரும், அவருடைய மனைவியும் உடல் உறுப்பு தானம் செய்து, ஒரு முன்மாதிரியாய் திகழ்கிறார்கள் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 22) சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையமும் இணைந்து நடத்தும் எலும்புதானம் குறித்த விழிப்புணர்வு பயிற்சிபட்டறை மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்தி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை 1952 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரால் உருவாக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது, புற்றநோய் வராமல் தடுப்பதற்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதனால் புற்றுநோய் வருகிறது? புற்றுநோயை வராமல் தடுப்பது எப்படி? எத்தனை வகையான புற்றுநோய் இருக்கிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வாகனம் ஒன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம், தமிழகத்தின் 98 இடங்களுக்கு மாநகராட்சி, நகரப் பகுதிகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த வாகனம் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும்போது இதை பாதுகாப்பது, வாகன நிறுத்தம் போன்றவற்றுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவத்துறையின் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மூலம் கடிதம் அனுப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் தமிழகத்தில் நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

தமிழக அரசும், அடையாறு புற்றுநோய் நிறுவனம் ஒருங்கிணைந்து cancer Registry ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த நிலையில் உள்ளார்கள்? எந்த வகையான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் போன்ற விவரங்களை பதிவேட்டின் மூலம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றிருக்கிறது.

சென்னை அடையாறு புற்றுநோய் நிலையத்தில் ஒரு புதிய முயற்சியாக எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வங்கி ஒன்று ஏற்கெனவே தொடங்கிவைக்கப்பட்டிருந்தாலும், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மனித உடலின் உறுப்புகள் அனைத்துமே தானம் பெறப்பட்டு அதன்மூலம் உயிர்பெற்று வருகிறார்கள்.

தமிழக முதல்வரும், அவருடைய மனைவியும் உடலுறுப்பு தானம் செய்து ஒரு முன்மாதிரி தம்பதியினராய் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 3,300 வாழும் உறுப்புக்கொடையாளர்களிடமிருந்து பல்வேறு உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 2,750 நோயாளிகள் குணம்பெற்றிருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையம் மூலம் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு 142 மூளைத்தண்டு சாவு அடைந்தவர்களிடமிருந்து எலும்புகள் தானமாக பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எலும்புகள் தானமாக தரலாம். எலும்புகளும் தர முடியும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்படுகிற எலும்புகள் 25 நோயாளிகளுக்கு பொறுத்த முடியும் என்று மருத்துவத் துறை சொல்கிறது. மூளைச்சாவு அடைந்தவர் ஏற்கெனவே மூளை, இதயம், கல்லீரல் ஆகியவை தானம் செய்யப்பட்டிருந்தாலும்கூட, எலும்பு தானமும் செய்யலாம்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி 100 சதவிகிதம் புகையிலை பொருட்களின் பயன்பாட்டைத் தடுப்பதற்கு காவல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று நான் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகையிலை, குட்கா போன்றவற்றை விற்பனை செய்பவர்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டபோது, இச்செயலில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கோவையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை தெரிவித்தார். குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.

அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் கல்லூரி மாணவர்களிடமும், மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். முதல்வரும் இச்செயலில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு தெரிவித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோதே தமிழகத்தில் குட்கா பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்பதை சட்டப்பேரவையிலேயே தெரிவித்தோம். அதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேரை கடந்த அரசாங்கம் படாதப்பாடுபடுத்தியது.

சந்தேகம் கிளப்புவது, வதந்தி பரப்புவது என்பது எளிதான விசயம். ஆனால், உண்மைத்தன்மையை கண்டுபிடித்து பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பதுதான் அவசியமான ஒன்று. நடிகர் விவேக் மரணமடைந்தபோது வதந்தியை பரப்பியதால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் ஒரு சிறிய தொய்வும் இருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

எனவே, எந்த செய்தியை கொண்டுபோய் சேர்ப்பதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மைத்தன்மையை கொண்டுசென்றால்தான் ஆரோக்கியமாக இருக்கும். ஏற்கெனவே மாநில அரசு நடிகர் விவேக் மரணம் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டதல்ல என்பதை விளக்கியிருக்கிறது. இதை மத்திய அரசும் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இச்செய்தி மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையைத் தரும். தடுப்பூசி செலுத்திக்கொள்வது தவறான விஷயம் அல்ல என்று முழுமையான அளவில் விழிப்புணர்வு ஏற்படும்.

தற்போது 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டியவர்கள் 57 லட்சம் பேர் இருக்கின்றனர். முதல்வர் தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டம் நடத்தி அதிலேயேயும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் இம்முகாம்களைப் பயன்படுத்தி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

உலகம் முழுவதும் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 75 ஆயிரம் என்று உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் 45 ஆயிரம் அளவுக்கு நேற்று ஒரே நாளில் உயர்ந்துள்ளது. சீனாவில் விமான நிலையங்களும், கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

எனவே, தமிழகத்தில் தொற்றின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது எனக் கருதி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பது, விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து தமிழர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசின் நீட் விலக்குத் தொடர்பான ஆழமான சட்ட முன்வடிவை, 84 ஆயிரம் பேரிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்ட தெளிவான சட்டமுன்வடிவை தமிழக ஆளுநரும் அனுப்பி வைப்பார். அதற்கு இந்தியாவின் குடியரசுத் தலைவரும் அனுமதியளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.