மனிதர்களுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் இடையிலான போரில், மனிதர்கள் ஒருபோதும் இவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்ததில்லை. ஆனால், இதை அரசியலர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள்.

புதிய தொற்றுநோய் பற்றிய முதல் எச்சரிக்கை மணி டிசம்பர் 2019-ன் இறுதியில் ஒலிக்கத் தொடங்கியது. 2020, ஜனவரி 10-ம் தேதிக்குள் அறிவியலர்கள் அதற்குக் காரணமான வைரஸைப் பிரித்தெடுத்ததோடு மட்டுமல்லாமல், அதன் மரபணுவையும் வரிசைப்படுத்தி, அது தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட்டார்கள்.

பெருந்தொற்று நேரத்திலும்கூட நம்மை டிஜிட்டல் சர்வாதிகாரத்திலிருந்து பாதுகாக்கும் மூன்று அடிப்படை விதிகள்: முதலாவதாக, நீங்கள் மக்களைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும்போதெல்லாம் – குறிப்பாக அவர்களின் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி – அவர்களுக்கு உதவப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதைத் திரிக்கவோ கட்டுப்படுத்தவோ அல்லது தீங்கு செய்யவோ கூடாது.

இரண்டாவதாக, கண்காணிப்பு என்பது இருவழிப் பாதையாகும். இது மேல்மட்டத்திலிருந்து கீழ்நோக்கி மட்டுமே செல்லுமென்றால், அது சர்வாதிகாரத்துக்கான பாதையாகிவிடும். ஆகவே, எப்போதெல்லாம் தனிநபர் மீதான கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுகிறதோ அப்போதெல்லாம் அரசு மீதும் பெரிய குழுமங்களின் மீதுமான கண்காணிப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

மூன்றாவதாக, ஒரே இடத்தில் அதிகத் தரவுகள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இது பெருந்தொற்று இருக்கும் காலத்துக்கும், அது இல்லாத காலத்துக்கும் பொருந்தும். தரவு ஏகபோகம் (data monopoly) என்பது சர்வாதிகாரத்துக்கான வழிகளில் ஒன்றாகும்.

எனவே, பெருந்தொற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக மக்களிடமிருந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டால், அதை சுயாதீன சுகாதார அமைப்பு செய்ய வேண்டுமேயொழிய, காவல் துறையினர் செய்யக் கூடாது. இப்படிச் சேகரிக்கப்படும் தரவுகள் தனியாக வைக்கப்பட வேண்டுமேயொழிய, அரசின் மற்ற அமைச்சகங்களிடமோ பெருங்குழுமங்களிடமோ இருக்கக் கூடாது. இது பணிநீக்கங்களையும் திறனற்ற தன்மைகளையும் உருவாக்கும் என்பது நிச்சயம்.

அரசியல் முகாம்களைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய மூன்று முக்கியப் படிப்பினைகள்: முதலாவதாக, நாம் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும். பெருந்தொற்றின்போது இது நமக்கான விடிவுகாலமாக இருந்தது. ஆனால், இதுவே விரைவில் இன்னும் மோசமான பேரழிவுக்கு ஆதாரமாக மாறக்கூடும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு நாடும் அதன் பொதுச் சுகாதார அமைப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டும். இது நன்கு தெரிந்தாலும் அரசியலர்களும் வாக்காளர்களும் சில நேரங்களில் மிகத் தெளிவான பாடத்தைப் புறக்கணித்துவிடுகிறார்கள்.

மூன்றாவதாக, தொற்றுநோய்களைக் கண்காணிக்கவும் தடுக்கவும் ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய அமைப்பை நாம் நிறுவ வேண்டும். மனிதர்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் இடையிலான நீண்ட போரில், முதல் நிலையானது ஒவ்வொரு மனிதரின் உடல் வழியாகவும் செல்லும். இந்த நிலை நாம் வாழும் கிரகத்தில் எங்கு மீறப்பட்டாலும் அது நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தும்.