புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 5000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கரோனா தொற்று நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் இதுவரை மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,90,282 என்றளவில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் 3,345 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,26,36,710 என்றளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழக்க இதுவரை இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. அடுத்தபடியாக கேரளா, டெல்லி, ஹரியாணா, கர்நாடகா, தமிழகம், தெலங்கானா, உத்தரப்பிரதேசத்தில் தொற்று அதிகமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாலில் 1881 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு B.A.5 திரிபு கரோனா பரவல் இருப்பதாக மாநில சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. மும்பையில் மட்டும் நேற்று 1242 பேருக்கு தொற்று உறுதியானது. இருப்பினும், கரோனா மரணங்கள் ஏதும் அங்கு பதிவாகவில்லை.