தமிழகத்தில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற  தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, நான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நேரத்தில், இந்த அரங்கத்திற்கு வெளியிலே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஸ்டார்ட் அப் அரங்குகளில் நம்முடைய இளைய சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் புதிய முன்னெடுப்போடு அமைத்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்த்து நான் பிரமித்துப்போய் நிற்கிறேன். அப்படி அமைத்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளை இந்த நல்ல நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அமைச்சர் மற்றும் செயலர்களிடம் இந்த Conclave-க்கு மாணவர்கள் வருகிறார்களா என்று நான் ஒரு கேள்வியைக் கேட்டேன். வருகிறார்கள், 300 மாணவர்களுக்குக் குறையாமல் வந்துகொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை எனக்கு சொன்னார்கள். மகிழ்ச்சி. அதே நேரத்தில் என்னுடைய கோரிக்கை என்னவென்று கேட்டீர்களானால், தமிழ்நாடு தொழில் படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இதனை கொண்டு சேர்க்கக்கூடிய வகையில் அடுத்த முறை நீங்கள் “நான் முதல்வன்” திட்டம் மூலமாக இதனை இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று உங்களை உரிமையோடு இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் அந்த உன்னத இலக்கோடு திராவிட மாடல் ஆட்சியானது தமிழகத்தில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி  அனைவருக்குமான வளர்ச்சியாக அதனை வடிவமைத்து – அதன்படியே நாம் திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது இலக்கை நோக்கிப் பெருமுன்னேற்றம் கண்டு வருகிறோம்.

அனைத்துத் துறைகளுமே முன்னோக்கிய பாய்ச்சலில் இன்றைக்கு போய்க்கொண்டு இருக்கின்றன. அதில் சிறுகுறு, நடுத்தரத் தொழிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. இதற்குக் காரணமாக இதற்கு அடித்தளம் அமைத்து, துடிப்புடன் பணியாற்றி வரும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களையும்,  துணை நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அதிகாரிகளையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்,  வாழ்த்துகிறேன்.

தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலில் பார்த்தீர்கள் என்றால் ஏற்கனவே நாம் 14-வது இடத்தில் இருந்தோம். அந்த 14-வது இடத்திலிருந்து இப்போது தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. அதேபோல் அண்மையில் “ஸ்டார்ட் அப் இந்தியா” வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில், பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக “லீடர்” அங்கீகாரத்தினைத் இப்போது நம்முடைய தமிழ்நாடு பெற்றிருக்கிறது.  ஏராளமான புத்தொழில்களை நாம் உருவாக்கி வருகிறோம். அதற்காக “ஸ்டார்ட் அப் தமிழ்நாடு” என்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. மாநாடு என்று நீங்கள் சொன்னாலும் – இது மாநாட்டைப் போலதான் நடந்து கொண்டிருக்கிறது.

1240 புதிய தொழில் நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன. தொழில் காப்பகங்கள் வந்துள்ளன. 92 நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் கண்காட்சி இங்கே நடந்து கொண்டிருக்கிறது. கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதைவிட மாபெரும் மாநாடு வேறு இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். அதற்காக உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள் சார்ந்து இந்த நிதியாண்டின் இறுதியில் இரண்டு மிகப்பெரிய மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஒன்று தொழில்நுட்ப மாநாடாகவும்; இன்னொன்று புத்தாக்க மாநாடாகவும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

• இன்றைய நிகழ்வில் டான்சீட் (TANSEED) திட்டத்தின் கீழ் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு “தமிழ்நாடு அரசு புத்தொழில் ஆதார நிதி” வழங்கப்பட்டு இருக்கிறது. இது தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானிய நிதி. இன்று இந்த நிதியைப் பெற்ற 31 நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் பெண் தொழில் முனைவோர்களால் நடத்தப்படுவது என்பது மிகமிகச் சிறப்பு!

• இன்றைக்கு ஆக்சிலரேட்டர் (Accelerator) எனப்படும் 5 தொழில் முடுக்ககங்களை தொடங்கி வைத்திருக்கிறேன். இதன் மூலம், இளம் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலில் விரைவாகவும், தெளிவாகவும் வளர்ச்சி அடைவதற்கான நுட்பங்களை கற்றுக் கொள்ளலாம்.

• வட்டார அளவிலான புத்தொழில் மையங்களை மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்றைக்கு திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்கிற நல்ல நோக்கத்துடன் இந்த வட்டார புத்தொழில் மையங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. இளைய தலைமுறையினர் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் “ஆடுகளம்”, சவால்களை சந்திக்க கற்றுத்தரும் “தடை அதை உடை” போன்ற பல நிகழ்வு இந்த வட்டார மையங்களின் வழி நடைபெறும்.

• தமிழ்நாட்டில் உள்ள தொழில் காப்பகங்களுக்கு தரவரிசைக் கட்டமைப்பு வழிமுறைகள் இன்று என்னால் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான தொழில் காப்பகங்கள் இயங்கி வருவதாக தரவுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் புத்தொழில் காப்பகங்களையும் உலகத் தரத்திற்கு உயர்த்துவதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, இன்னும் பல்வேறு முயற்சிகளில் இத்துறை ஈடுபட்டிருக்கிறது. அதனைத் தலைப்புச் செய்திகளாக நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

• வளர்ந்துவரும் நவீன துறைகளை மையமாகக் கொண்டு இயங்கும் புத்தொழில் மற்றும் தொழில் முனைவு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

• அண்ணா பல்கலைக்கழகத்தில் “தமிழ்நாடு தொழில்நுட்பப் புத்தாக்க மையத்தை” (i-TNT Hub) சுமார் 54 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன.  25,000 சதுர அடியில் அமையவிருக்கும் இந்த மையமானது, I.I.T ஆராய்ச்சிப் பூங்காவைப் போன்று (IIT Research Park) உலகத்தரம் மிக்க நிறுவனங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத் துறைகளுக்கான காப்பகம், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் மற்றும் வளர்ந்து வரும் எதிர்கால தொழில்நுட்பங்கள் சார்ந்து இயங்கும் அனைத்து புத்தொழில் முனைவோர்களுக்கும் பயன் தரும் வகையில் தொழில் முனைவோர்கள் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்காக   “ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிராண்ட் லேப்ஸ்” (StartUpTamilNadu Brand Labs) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இளம் தொழில் முனைவோர்கள் சந்திக்கும் பல்வேறு சந்தைப்படுத்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வணிகமும் பெருகும்.

• புத்தொழில் நிறுவனங்களை அறிமுகப்படுத்தும் “லான்ச் பேட்” (Launch Pad) நிகழ்வுகளையும் நடத்த இருக்கிறோம்.

• ஊரகப்பகுதிகளில் உள்ள பெண்கள், தொழில் முனைவில் ஈடுபட உதவும். அந்த வகையில் “தொழிலணங்கு” என்ற பெயரில் நிகழ்வினை நடத்துகிறது டான்சிம்.

• உலகெங்கும் உள்ள தமிழ் முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து “தமிழ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க்” (Tamil Angels Network) தளம் விரைவில் அமைக்கப்படும்.

• புத்தொழில் நிறுவனங்களையும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் துறைசார் விற்பன்னர்களையும் இணைக்கும் வகையில் திறன்மிக்க “வழிகாட்டி மென்பொருள்” ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.

• சென்னை நந்தனத்தில் புத்தொழில் மையம் மூன்று மாதத்தில் செயல்படத் தொடங்கும்.

• புதிய “புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை” விரைவில் வெளியிடப்படும்.

2030-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் கனவுடன் பயணிக்கும் நமக்கு, இவை அனைத்தும் உதவிகரமாக அமையப் போகின்றன.

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, தொழில்துறை சார்பில் ஆறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். அந்த ஆறு முதலீட்டு மாநாடுகள் மூலமாக இதுவரை மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய முழுமுதல் ஆசை.

புத்தாக்க மற்றும் புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோள் காலத்தின் கட்டாயம். அதற்காக இந்த நடப்பு நிதியாண்டில், தமிழக நிதிநிலை வரலாற்றிலேயே முதல் முறையாக சுமார் 250 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்பில் திட்டங்களை அறிவித்து திறம்பட செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

நல்ல பல முன்னெடுப்புகளை நான் பார்க்கிறேன். இவை அனைத்தையும், அனைத்து அமைச்சர்களும், அனைத்துத் துறை அதிகாரிகளும் வாரம்தோறும் கண்காணிக்க வேண்டும். கண்காணித்தால் மட்டும்தான் அந்தத் திட்டம் உருவாக்கியதற்கான பயன் நிச்சயம் கிடைக்கும். தொய்வு இருந்தால், அதை முடுக்கிவிட வேண்டும். சிறுகுறு மற்றும் நடுத்தரத் துறைக்கு மட்டுமல்ல அனைத்துத் துறைக்குமே இது பொருந்தும்.

வாரம்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நான் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் நடத்துகிறேன் என்றால், அதற்கு இதுதான் காரணம்.

முற்போக்கான திட்டங்கள் –

தேவையான நிதி ஆதாரங்கள் –

துறைகள் ஒருங்கிணைப்பு –

தொடர் கண்காணிப்பு – ஆகிய நான்கும் இணையும்போதுதான் மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும்.

இதில் ஒன்று பலவீனம் அடைந்தாலும் முழுப்பலனை நாம் பெற முடியாது. அந்த வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். புத்தொழில்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதற்கான மனித வளத்தை உருவாக்க, “நான் முதல்வன்” போன்ற திட்டங்கள் கைகொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.