நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, அந்த வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கெனவே இறக்குமதிக்கான தீர்வை செலுத்தியுள்ள நிலையில் நுழைவு வரி வசூலிக்க தடை விதிக்கக் கோரி விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு மட்டும் இடைக்காலத்தடை விதித்தனர். அவர் ஏற்கெனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக எஞ்சிய வரியை செலுத்தவும் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செலுத்த வேண்டிய நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்திவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.