பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்கும் பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிறைவேறியதை வரவேற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, அதைப்போலவே தமிழக அரசும் ஆளுநரின் அதிகாரத்தை மறுவரைறை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களாட்சித் தத்துவத்தை கடைபிடிக்கும் நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் அதிகாரங்கள் இருக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அதிகாரங்கள் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் (State, central, concurrent list) என்று அரசியல் சாசனத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்த அதிகாரப்பகிர்வில் மாநிலத்தின் முக்கிய விவகாரங்களில் மத்திய அரசின் கை மேலோங்கி இருப்பதும், மாநில அரசின் கைகள் கட்டப்பட்டிருப்பதும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் மாநில சுயாட்சி குரல் தமிழகத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. தற்போது விவாதத்திற்குள்ளாகியிருப்பது ஆளுநரின் அதிகார எல்லை குறித்தானது. குறிப்பாக மாநிலப் பல்கலைக் கழகங்களின் நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு குறித்தானது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது மாநில சுயாட்சியை நோக்கிய ஒரு முன்னேற்றப் படிக்கல்லாகப் பார்க்கவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், வல்லுநர்கள் அடங்கிய தேர்வுக்குழு பரிந்துரைத்த பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து, மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை மட்டுமே பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநரால் நியமனம் செய்ய முடியும் (இதுநாள்வரை தேர்வுக்குழுவானது பரிந்துரையை ஆளுநருக்கு நேரடியாக அனுப்பிவைத்தது). இதனால், ஆளுநரின் விருப்பத்திற்கேற்ப இனிமேல் துணைவேந்தரை நியமிக்க முடியாது.

மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் (Chancellor of Universities) என்ற அதிகாரமானது அரசியல்சாசனத்தின் மூலம் வழங்கப்பட்டது கிடையாது. மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படியே வழங்கப்பட்டதாகும் (அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் 1978 (பிரிவு 9.1), பெரியார் பல்கலைக்கழகச் சட்டம் 1997 (பிரிவு 10.1), டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச் சட்டம் 1997 (பிரிவு 10.1).

மாநில அரசுகள் விரும்பினால் இச்சட்டத்தைத் திருத்தி பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மறுவரையறை செய்துகொள்ளலாம். இதைத்தான் மகாராஷ்டிரா அரசு செய்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகம்மதுகானுக்கும் இடையில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, ”பல்கலைக் கழகங்கள் தொடர்பான கேரள மாநில அரசின் சட்டத்தின் மூலம் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் திருத்தி சட்டம் இயற்றுங்கள். உடனே அதற்கு ஒப்புதல் தருகிறேன்” என்று கேரள ஆளுநர் ஊடகங்களிடம் வெளிப்படையாகப் பேசி 5 பக்க விரிவான அறிக்கையை டிசம்பர் 8-ம் தேதியன்று கேரள முதல்வருக்கு அனுப்பியதை இச்சமயத்தில் நினைவுகூரவேண்டியது அவசியமாகிறது. அதாவது, மாநில அரசு விரும்பினால் ஆளுநரின் அதிகாரத்தை மறுவரையறை செய்யமுடியும் என்பதே மகாராஷ்டிரா, கேரளா நிகழ்வுகள் தரும் செய்தியாகும்.

மாநில சுயாட்சியை உரக்கப் பேசும் தமிழகமானது பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தை மறுவரையறை செய்வதில் முதல் மாநிலமாக நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். மாறி, மாறி ஆட்சிசெய்த கழக அரசுகள் ஏனோ இதைத் தீவிரமாக முன்னெடுக்கவில்லை. இதற்காக சட்டமன்றத்தில் உரிய சட்டத் திருத்தம் கொண்டுவரவில்லை.

தற்போது, மகாராஷ்டிராவில் இது குறித்தான சட்டம் இயற்றப்பட்டுள்ள நிகழ்வானது, தமிழகத்திலும் உயர் கல்வியில் ஆளுநரின் அதிகார எல்லை பற்றிய விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியதை நினைவுகூர்வதாகக் கருதவேண்டும். கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து – அவர்களிடமிருந்து விரிவான பரிந்துரையைப் பெற்று தமிழக அரசும், மாநிலப் பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநரின் அதிகார எல்லையை மறுவரையறை செய்வதற்கான சட்டத் திருத்தத்தை விரைவில் கொண்டு வரவேண்டுமென்று மாநில சுயாட்சி, அதிகாரப் பரவலுக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.