தமிழக அரசுக்கு ஆளுநர் ஆதரவாக இருக்க வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்களுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் 51 சதவீத அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் அடித்தளம் என்றால், உயர்கல்வி வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதே பாணியில் தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.
இருமொழிக் கொள்கை என்பதுபுதிது அல்ல, அண்ணா காலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ளஒன்றுதான். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை இருக்க வேண்டும். 3-வது மொழியை மாணவர்கள் படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அது விருப்பப் பாடமாக இருக்க வேண்டும். அது கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்துள்ளோம். தமிழக அரசுக்கு தமிழக ஆளுநர் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே திருச்சி இந்திரா கணேசன் கல்வி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழகத்துக்கான கல்விக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என்றார். தமிழகஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் திட்டம்உள்ளது. இதற்காக மாநில கல்விக் கொள்கை குழு அமைக்கப்படும். அப்போது, தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நமது நிலைப்பாடு தெரியும் என்றும் தெரிவித்தார்.