இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் டி20 தொடர் மட்டும் விளையாடியானாலே போதும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தீவிரமாக எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.

துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நியூஸிலாந்து வென்றுவிட்டால் அரையிறுதி ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

அதேசமயம், இந்திய அணியைத் தாயகத்துக்கு டிக்கெட் போட வைத்துள்ளது வில்லியம்ஸன் படை. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது.

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை பாகிஸ்தானிடம் 50 ஓவர்கள், டி20 போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்துவந்த இந்திய அணி முதல் முறையாகத் தோற்றது. இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளைத் தீவிரமாக எடுக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர்தான் உலகிலேயே அதிக பணம் கொழிக்கும் கிரிக்கெட் லீக். இந்த ஐபிஎல் டி20 தொடரில் மட்டும் விளையாடினாலே போதுமானது என்ற மனநிலைக்கு இந்திய அணி வீரர்கள் வந்துவிட்டார்கள் என நினைக்கத் தோன்றுகிறது

சர்தவேசப் போட்டிகள் மீது அவர்களுக்குத் தீவிரமான அக்கறை இல்லை எனத் தெரிகிறது. கடைசியாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் சீனியர்கள் அனைவரும் சேர்ந்து 50 ஓவர்கள், டி20 போட்டியில் விளையாடினார்கள். அதன்பின் நவம்பரில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார்கள். இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளை யாரும் தீவிரமாக எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

நீங்கள் விரும்பும் அளவுக்கு உலக அளவில் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடலாம். லீக் கிரிக்கெட்டில் விளையாடும்போது, எதிரணியில் ஒன்று அல்லது இரு சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியும். ஆனால், சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போது 5 சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வீர்கள்.
ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணியில் இளம் வீரர்கள் மட்டுமே இருந்தனர். சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸில் இந்திய அணி தோல்வி அடைந்ததும், ரோஹித் சர்மாவை 3-வது இடத்தில் களமிறக்கியதும் மோசமானது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சிறந்ததுதான். ஆனால், ஒருதரப்பான ஆட்டமாக அமைந்தது. இந்திய அணி ஏராளமான தவறுகளைச் செய்தது. டாஸில் தோல்வி அடைந்தவுடனே மனரீதியாக இந்திய வீரர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

இதில் மிகப்பெரிய குழப்பம் வாழ்வா சாவா என்ற போட்டியில் ரோஹித் சர்மாவை 3-வது இடத்தில் களமிறக்கியது. டி20 போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கி ரோஹித் 4 சதங்களை அடித்துள்ளார். அவரை 3-வது வீரராகக் களமிறக்கினார்கள். இஷான் கிஷனை 3-வது வீரராகக் களமிறக்கியிருக்கலாம். இந்தத் தொடக்கமே இந்திய அணி பதற்றமடைந்துவிட்டது என்பதை உணர்த்தியது”.

இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்தார்.