இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்ஸ் ராணாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 29 நீதிபதிகள் கொண்ட குழு பார்வையிட்டது. அப்போது, கடற்படையின் செயல்பாடுகள் குறித்து கடற்படை அதிகாரிகள், நீதிபதிகளிடம் விளக்கினர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் 29 நீதிபதிகள் நேற்று முன்தினம் இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலான ஐஎன்ஸ் ராணாவை நேரில் சென்று பார்வையிட்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் புனித் சதா அவர்களை கப்பலுக்குள் வரவேற்றார். தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளிடம் கடற்படையின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

அதேபோல், ஐஎன்ஸ் ராணா கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்தும், அதிகாரிகள் நீதிபதிகளிடம் எடுத்துக் கூறினர். பின்னர், நீதிபதிகள் கப்பல் முழுவதும் சுற்றிப் பார்த்ததோடு, அதன் மாலுமிகளிடமும் கலந்துரையாடினர். பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.