வானியல் நிகழ்வான பகுதி சூரிய கிரகணம் இன்று (அக்.25) நடைபெற உள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் என்பது குறிப்பிட்டத்தக்கது. இது பகுதி சூரிய கிரகணம் தான் என்றாலும் கூட இதைத் தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

சூரிய கிரகணம் என்றால் என்ன? சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

இந்தியாவில் எங்கு காணலாம்? உலக அளவில் சூரிய கிரகணம் மதியம் 2.19-க்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நடைபெறும். இதை ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணமுடியும். அப்போது உலகின் எந்த பகுதியிலும் முழு கிரகணம் நிகழாது. அதிகபட்சம் ரஷ்ய நாட்டின் மத்தியப் பகுதிகளில் மட்டும் சூரியனை 80 சதவீதம் சந்திரன் மறைக்கும்.இதேபோல், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள நகரங்களிலும் இந்த நிகழ்வைக் காணலாம்.தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும் போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும். அப்போது அதிகபட்சமாக 8 சதவீதம் மட்டுமே சூரியன் மறைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் மீண்டும் பகுதி சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2-ம் தேதி நிகழும்.

வெறும் கண்களால் பார்க்கக் கூடாது: இந்த கிரகணத்தைப் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. மேலும், தொலைநோக்கி அல்லது எக்ஸ்ரே சீட்டுகளைக் கொண்டும் பார்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மை உடைய சிறப்புக் கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பார்க்கலாம். இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 8-ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும்.

யூடியூபில் நேரலை: சூரிய கிரகணத்தை காண விரும்பும் மக்களுக்காக, நைனிடால் ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம் (ARIES) மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஆகியவை செவ்வாய்கிழமை நடைபெறும் பகுதி சூரிய கிரகணத்தை தங்களது யூடியூப் சேனல்களில் மாலை 4 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. கீழ்க்கண்ட சேனல்களில் நேரலையைக் காணலாம்.

கோயில்களில் நடை சாத்தல்: சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை மணி 8.11 முதல் மாலை 7.40 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் நடை அடைக்கப்பட்டுள்ளன.கிரகணம் முடிந்த பின் சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஈரோடு பன்னாரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களிலும் நடை சாத்தப்பட்டுள்ளன. இருப்பினும் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் மட்டும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.