தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படி தான் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன.16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிமுகவிற்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இந்தக் கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என்று கூறிய அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் இந்தக் கடிதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படி தான் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்விஎம் ஏன்? 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 30 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் வாக்காளர் பெயர் பதிவு செய்தால், சொந்த தொகுதியில் தங்கள் பெயர் நீக்கப்படும் என்று அச்சப்படுவதால், அவர்கள் வாக்களிக்கவில்லை. எனவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

2023-ல் 9 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது ஆர்விஎம் இயந்திரத்தை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தவும், அதில் வெற்றி கிடைத்தால் 2024 மக்களவைத் தேர்தலில் முழுவதுமாகப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், ஆர்விஎம் இயந்திரத்தை அறிமுகம் செய்வதற்கு முன் வரும் ஜன. 16-ம் தேதி ஆர்விஎம் இயந்திர செயல்பாடுகள் குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்குமாறு 8 தேசியக் கட்சிகள் மற்றும் 57 மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படி தான் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.