நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி, வெற்றியை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் திறந்தவெளி பேருந்து ஒன்றில் வெற்றி உலா வந்தது. அப்போது அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பேவின் முகம் பதித்த பொம்மை ஒன்றை கையில் வைத்திருந்தார். அது சர்ச்சையானது.

இந்தச் சூழலில் பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் அடில் ராமி (Adil Rami), மார்டினஸின் செயலை கடுமையாக சாடியுள்ளார். கடந்த 2018 உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இவர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டின் போது மார்டினஸ், பிரான்ஸ் வீரர்கள் அடித்திருந்த ஷாட்களை அபாரமாக தடுத்திருந்தார். அதோடு இந்தத் தொடரில் முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு சிறந்த கோல் கீப்பருக்கான ‘தங்க கையுறை’ விருது வழங்கப்பட்டது. அதை பெற்றதும் மேடையில் அவர் மேற்கொண்ட செயல் பார்வையாளர்களை முகம் சுளிக்கச் செய்யும் வகையில் இருந்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களை பகிர்ந்து மார்டினஸின் செயலை ராமி விமர்சித்துள்ளார்.

“உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் மனிதர். கால்பந்து உலகின் மிகப்பெரிய அவலம் அவர் (மார்டினஸ்). எம்பாப்பே அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அதனால்தான் உலகக் கோப்பை வெற்றியை காட்டிலும் நமது அசாத்திய வீரருக்கு எதிராக கிடைத்த வெற்றியை இப்படி கொண்டாடி வருகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.