பல பதிற்றாண்டுகளாக அச்சு ஊடகங்கள்தாம் செய்திகளை, பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கிவந்தன. தொலைக்காட்சி வந்த பிறகும் அதே பெரிய ஊடகங்கள்தாம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, செய்திகளை வழங்கிவந்தன. சினிமாப் பாட்டுகளைப் பார்க்க வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சிக்காகக் காத்திருந்த காலம் மலையேறிவிட்டது. செய்திகளுக்காக, பாட்டு கேட்பதற்காக வானொலிகளை நம்பியிருந்த காலம் இன்று இல்லை. ஆனால், தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் வந்த பிறகு மக்கள் தங்கள் விருப்பப்பட்ட நிகழ்ச்சிக்காக இந்தப் பெரும் ஊடகங்களை மட்டுமே நம்பி இருந்தனர். தாங்கள் விரும்பும் கதைகளை வாசிக்க அச்சுப் புத்தகங்களை மட்டும் நம்பி இருந்தனர். ஆனால், இந்த நிலை இப்போது மெல்ல மாறத் தொடங்கியிருக்கிறது. இணையம் (Internet) கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்த மிகப் பெரிய மாற்றம் நிகழத் தொடங்கியிருக்கிறது. இந்த கரோனா காலம் அதை இன்னும் முடுக்கிவிட்டிருக்கிறது. அந்த மாற்றத்தைத்தான் படைப்பாளர் பொருளாதாரம் (Creator Economy) என அழைக்கிறார்கள்.

நிறுவனங்கள் சார்ந்து, அவற்றை மையமாகக் கொண்டு இயங்கிய இந்த ஊடகத் துறை பரவலாக்கப்பட்டுவருகிறது. இது 2000-க்குப் பிறகு நடந்த மிகப் பெரிய மாற்றம். மிகப் பெரிய தனியார் ஊடக நிறுவனங்கள் வளர்ந்து விருட்சமாக வளர்ச்சி அடைந்த காலகட்டத்திலேயே அதற்கு இணையாக இந்த ஊடகப் பரவலாக்கமும் இணையத்தின்வழி நடந்தது. இந்தக் காலகட்டத்தில் இணையம் ஒவ்வொரு வீட்டையும் எட்டியது. ஆர்வமும் திறனும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இணையத்தில் எதையும் பகிர்ந்துகொள்ளலாம் என்கிற நிலை உருவானது. அப்படி ஆர்வமிக்க திறமையானவர்கள் இணையத்தில் தங்கள் பதிவுகளை, வீடியோக்களைப் பகிர்ந்தார்கள். இப்படித்தான் பகிர்வு தளங்கள் உருவாகின. பாரம்பரிய ஊடக நிறுவனங்களின் தேவை இல்லாமல் ஆனது. செய்திகள், பொழுதுபோக்குச் செய்திகள் ஆகிவற்றுக்கு இந்தச் சுயாதீன படைப்பாளர்களின் பதிவு களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்படித்தான் படைப்பாளர் பொருளா தாரம் (creator economy) உருவானது. யூடியூப், ப்ளாக், ஸ்ட்ரீம் வீடியோ ஆப்கள் ஆகியவற்றின் மூலம் இது ஒரு சாம்ராஜ்யமாக ஆகியிருக்கிறது.

அது என்ன படைப்பாளர் பொருளாதாரம்?

இன்று மக்கள் உணவு சமைக்க, உணவகத்தைத் தேட, சினிமா பார்க்க, சுற்றுலா செல்ல என எல்லாவற்றுக்கும் சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளைச் சார்ந்து இருக்கிறார்கள். உதாரணமாக ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் குறிப்பிட்ட உணவகம் குறித்த பதிவுகளைப் பார்த்து அதைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுகிறார்கள். உணவு மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்ற பலவற்றுக்கும் மக்கள் இந்தச் சமூக ஊடகப் பதிவுகளின் பரிந்துரைகளை ஆலோசனையில் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ஆலோசனை வழங்குபவர்கள் படைப் பாளர்கள் (Content Creators). அவர்கள் இதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். தங்கள் பதிவுகளைப் பிறர் பார்ப்பதன்மூலம் கிடைக்கும் வருவாய், அவர்கள் சில பொருட்களைப் பரிந்துரைப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனம் அளிக்கும் கட்டணம் ஆகியவற்றின் மூலம் அவர்களால் சம்பாதிக்க முடிகிறது. இதனால் உருவாகும் பொருளாதாரத்தைத்தான், படைப்பாளர் பொருளாதாரம் என்கின்றனர்.

ஆனால், இணையம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் இது உடனே நடக்கவில்லை. இதற்குச் சில காலம் பிடித்தது. 2005இல்தான் யூடியூப் நிறுவப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அது அவ்வளவு செல்வாக்குச் செலுத்தவில்லை. இன்று தமிழில் உள்ள பிரபல யூடியூபர்களில் பெரும்பாலானவர்கள் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் தொடங்கியவர்கள்தாம். தமிழ்ப் பார்வையாளர்கள் யூடியூபை ஓர் ஊடகமாக முழுமையாக அங்கீகரிக்க கிட்டதட்ட பத்து ஆண்டுகள் ஆயிற்று எனலாம். இது இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது இதன் அறுவடைக் காலம். பல முன்னணி பதிவாளர்கள் பெருநிறுவன தலைமைச் செயல் அதிகாரிக்கு இணையாக இதில் பணம் ஈட்டுகிறார்கள்.

பார்வையாளர்களைக் கவரும் வகையிலான உள்ளடக்கத்தை (Content) உருவாக்குதல், அதன் மூலம் பார்வையாளர்களை வசப்படுத்துதல் (Subscribers), அதன் மூலம் ஒரு சமூகக் குழுவை உருவாக்குதல் (Community), பிறகு இதன்மூலம் பணம் சம்பாதித்தல் (Monetization) போன்ற நிலைகளில் இந்தப் படைப்பாளர் பொருளாதாரம் இயங்குகிறது.

எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆகியோர் தங்கள் படைப்புத் திறன்களைத் தகுந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்தப் புதிய ஊடகம் வழி வகைசெய்கிறது. இவர்கள் அல்லாது யாரும் தங்கள் திறமைகள் மூலம் சம்பாதிக்க முடியும். இதற்கு வேறு எந்தவிதமான கல்வித் தகுதியும் தேவையில்லை. படைப்பாளர் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று நேரடி ஒளிபரப்பு (Live Streaming). சேர்சாட், ட்ரெல் போன்ற செயலிகள், யூடியூப் விளாக், இன்ஸ்டாகிராம் ரீல் போன்ற பல வசதிகள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி ஒளிபரப்பு இப்போது பார்வையாளர்களால் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளும் மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமான உள்ளடக்கமாக ஆகியுள்ளன.

சுயாதீனப் படைப்பாளிகள், பதிவர்கள், வீடியோ உருவாக்குபவர்கள் போன்றோர்தாம் படைப்பாளர் பொருளாதாரத்தின் மையம் என வரையறுக்கலாம். இது உலக அளவில் மிகப் பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் இப்போது இது தொடக்க நிலையில் உள்ளது. இதை இலக்காக வைத்துப் பெரும் முதலீடு செய்யப்பட்டுவருகிறது. சுவாரசியமான படைப்புகளை உருவாக்கும் இளைஞர் களுக்கு இது பொருள் ஈட்டும் புதிய துறையாக இருக்கும்.