தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் ஆஸ்திரேலயா மற்றும் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் டெல்லியில் இந்திய தொல்லியல்துறையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை விரைவில் தமிழ்நாடு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் பெரும் முயற்சியின் விளைவாக கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோயில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரிவின் சட்டபூர்வமான வேண்டுகோள் கடிதங்களின் விளைவாக அமெரிக்காவில் இருந்து இரண்டு சிலைகளும் ( நின்ற கோலத்தில் உள்ள பார்வதி மற்றும் ஸ்ரீதேவி வரதராஜ பெருமாள்) ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு சிலையும் ( குழந்தை சம்பந்தர் ) சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்பிரிவின் தொடர் முயற்சியின் விளைவாக அமெரிக்காவில் இருந்து 7 புராதான சிலைகள் ( நடராஜர், கங்காளமூர்த்தி, நந்திகேஸ்வரர், சிவன், பார்வதி மற்றும் இரண்டு துவாரபாலகர் சிலைகள் ) இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சிலைகள் டெல்லியில் இந்திய தொல்லியல் துறையினரின் வசம் உள்ளது என்றும் அனைத்து சிலைகளும் மீட்கப்பட்டு, உரிய கோயில்களில் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும், காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் உள்ள 31 தொன்மையான சிலைகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டுகோள் கடிதம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.