ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மும்மூர்த்திகளான விராட் கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இடம்பெறவில்லை என்பது இவர்களது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகத்தை பலரிடத்திலும் எழுப்பியுள்ளது.

அதாவது 2021, 2022 டி20 கிரிக்கெட் பின்னடைவுகளுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை கட்டமைக்கும் முனைப்பில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்பது புரிகிறது.

இப்போதைக்கு ரோஹித் சர்மா காயத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை என்றும் விராட் கோலி ஒரு சிறு ‘பிரேக்’ கேட்டார் என்றும் பல செய்தி அறிக்கைகள் கூறினாலும், ரோஹித், ராகுல், கோலியைத் தாண்டி பிசிசிஐ யோசிக்கத் தொடங்கிவிட்டது என்பதையே மூவர் நீக்கம் அறிவுறுத்துவதாகத் தெரிகிறது. பிரபல செய்தி நிறுவனமும் இதனை உறுதி செய்துள்ளது. அதாவது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நடைமுறையின் முதற்கட்டம் இது என்று கூறுகிறது அந்த செய்தி நிறுவனம்.

மேலும் 2023-ம் ஆண்டு 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது, 2011க்குப் பிறகு கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிட்டியிருப்பதால், கோலி, ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தட்டும் என்ற காரணத்தினாலும் டி20 சுமையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதுவும் ஹர்திக் பாண்டியா கேப்டன், சூரியகுமார் யாதவ் துணைக் கேப்டன் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நிச்சயமாக டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பிசிசிஐ அடுத்த தலைமுறை வீரர்களை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது. எது எப்படியோ ரோஹித் சர்மா, விராட் கோலி, பார்மைத் தேடிக்கொண்டிருக்கும் கே.எல்.ராகுலிடமிருந்து விடுபட்டால் சரி என்ற நிம்மதியே ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும். இது ஒரு நல்ல தொடக்கம்தான்!

ஆனால் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இல்லை என்பதன் காரணம் என்னவென்று பிசிசிஐ-யினால் தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா, அல்லது அவரை நீக்கியுள்ளார்களா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் முழங்கால் பிரச்சினை காரணமாக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 2 வாரம் சிகிச்சை மற்றும் பயிற்சி பெறப்போவதாக இன்னொரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கின்றது.

பிசிசிஐ வெளிப்படையாகச் செயல்பட வேண்டிய காலக்கட்டம் வந்து விட்டது. இல்லையெனில் ஏகப்பட்ட யூகங்களுக்கே வழிவகுக்கும், இதனால் ரசிகர்களுக்கு குழப்பமே மிஞ்சும்.