சென்னை: நடிகர் விவேக் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்திருக்க கூடிய நிலையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்திருக்க கூடிய அவரது சாலைக்கு அவரது பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டது. இன்றைய தினம் அந்த சாலையில் பெயர்ப்பலகை தற்போது திறந்து வைக்கப்பட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சின்ன கலைவாணர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மறைவு பல்வேறு தரப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் கடந்த வாரம் விவேக்கின் மனைவி அருள்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ வைக்குமாறு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் அந்த சாலையின் பெயர்மாற்றம் செய்யப்பட்டு பெயர்பலகையும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பெயர்ப்பலகை திறந்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பெயர்பலகையை திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மறைந்த விவேக் அவர்களை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் விவேக் கலைமாமணி விருது பத்ம ஸ்ரீ விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.