ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக மேற்கித்தியத் தீவுகள் அணி வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

வரும் டி20 உலகக் கோப்பையோடு டி20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளதாக பிராவோ முன்னரே தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் நேற்று நடந்த, இலங்கையுடனான ஆட்டத்துக்குப் பிறகு தனது ஓய்வை பிராவோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவைன் பிராவோ கூறும்போது, “நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனது விளையாட்டு வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், எனது விளையாட்டு வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் நாட்டுக்காக விளையாடியதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நாங்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பை அல்ல, வீரர்களாகிய நாங்கள் விரும்பிய உலகக் கோப்பை அல்ல. இது கடினமான போட்டி. ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று தெரிவித்தார்.

தேவையான நேரத்தில் ஆல்ரவுண்டர் அவதாரம் எடுக்கும் பிராவோ மே.இ.தீவுகள் அணியின் மிகப்பெரிய பலமாக இருந்தார். மே.இ.தீவுகள் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

டி20 போட்டிகளில் டெத் பவுலர் என்று வர்ணிக்கப்படும் பிராவோ, மே.இ.தீவுகள் அணிக்காக 85 டி20 போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ரன்களையும் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ரன்களும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ரன்களும் 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும், லீக் போட்டிகளில் பிராவோ தொடர்ந்து விளையாடுவார் என்று அவரே கூறியுள்ளார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பிராவோ, அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here