காஞ்சிபுரம் மாவட்டம்குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருபவர் கோதண்டம் என்பவர் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது அதில் இருந்த குப்பை தொட்டியில் கைபை ஒன்று இருந்தது.

அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் வந்த  போலீசார் நகைபையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 35 வயதுடைய பெண் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகைபையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

அந்த பெண் யார் என போலீசார் விசாரித்து வந்த நிலையில் குன்றத்தூரில் 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் வாய்மொழியாக போலீசாருக்கு தெரிவித்த நிலையில் பின்னர் அவர் வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர்.

அப்போதுதான் அவர் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது குறித்து போலீசார் அவரது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. உரிய நேரத்தில் நகை பையை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை போலீசார் வெகுவாக பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here