தற்போது இருக்கும் முதலமைச்சரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதால் கேட்டிருக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு, தன் தொகுதியில் ஒரு கல்லூரியை கூட உருவாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போதுகூறினார்.

தமிழக சட்டப்பேரவையில், வினா-விடை நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னார் அமைச்சருமான செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு தொகுதியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மதுரை மாவட்டத்தில் 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் இருப்பதாகவும், பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவரின் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளதாகவும் கூறினார்.

கேட்பவரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதை அறிந்திருக்கும் செல்லூர் ராஜு, தற்போது இருக்கும் முதலமைச்சரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதால் கேட்டிருக்கிறார் எனவும் அவரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பம் என தெரிவித்தார்.

மேலும் கல்லூரி அமைப்பது சாதாரண விசயமல்ல எனக்கூறிய அமைச்சர் பொன்முடி, ஒரு புதிய அரசு கல்லூரி அமைக்க 34 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆண்டுக்கு ரூ. 2.25 கோடியும், கட்டுமான பணிகளுக்கு ரூ.12 கோடியும் தேவை எனவும் விளக்கமளித்தார்.