திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கத் தேர் நவம்பர் மாதம்சுவாமி புறப்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறையின் சார்பில்நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் 1972-ம் ஆண்டு தங்கத் தேர் செய்யப்பட்டது. இந்தத்தேர் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்ததால் மரத்தூண்கள், மரபாகங்கள் சேதமடைந்தன. இதனால், உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

தங்க தேரை சரிசெய்ய ஏதுவாக கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்ப்பு குழுவினரால் தேரில் தங்கரேக் பதிக்கப்பட்ட செப்புத் தகடுகள் குடைக்கலசம் முதல் சுவாமி பீடம் வரை உள்ள பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டன.

சுவாமி அடிப்பலகை முதல் அடிப்பட்டறை வரை உள்ள செப்பு மீது தங்கரேக் பதித்த தகடுகள் மற்றும் வெள்ளி நகாசு தகடுகள் பிரிக்கப்படாமல் மரத்தேரிலேயே விடப்பட்டன.

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜூலை 2-ம் தேதி கோயிலுக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்ட போது, பழுதடைந்துள்ள தங்கத் தேர் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து திருத்தேர் வீதி உலா வர அறிவுரை வழங்கினார்.

அதன்படி, ரூ.15 லட்சம் செலவில் தேரில் மர வேலைகள் முடிக்கப்பட்டு புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஏற்கெனவே பிரித்து வைக்கப்பட்ட தங்க ரேக் பதித்த செப்புத் தகடுகளை மீண்டும் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தங்கத் தேரில் உள்ள தகடுகளை சுத்தம் செய்யும் பணிகள், கை மெருகூட்டும் பணிகள் செப்பு ஆணிகள் பதிக்கும் பணிகள் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழுதடைந்த தங்கத் தேரின் மேற்கூரையை சரிசெய்யும் பணிகளும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கோயிலின் தங்கத்தேர் சுவாமி புறப்பாட்டுக்கு தயாராகிவிடும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.