மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வசூல் ரூ.500 கோடியை எட்டியுள்ளது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாக நிலையில், நடிகர் விக்ரம் அதனை ஷேர் செய்துள்ளார். ‘இது கனவல்ல என என்னிடம் யாராவது சொல்லுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை குவித்துள்ளது.

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. திரையரங்கைத் தொடர்ந்து படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி படம் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் உலக அளவில் ரூ.500 கோடி வசூலித்ததை அறிவிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அத்துடன் 50 நாள் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். அதில், ‘என்னைக் கிள்ளி, யாராவது இது கனவு என்று சொல்லுங்களேன்” என கேப்ஷனிட்டுள்ளார். இதன்மூலம் படம் ரூ.500 கோடி வசூலித்தது அதிகாரபூர்வமானது என ரசிகர்கள் உறுதிசெய்துள்ளனர்.