“உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, ஒருவேளை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம்” என்று மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று பேசியது: “நீதித் துறைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் இருப்பதில்லை. கழிப்பறை சரியாக இருப்பதில்லை. இதனால் நீதிமன்றத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் சென்னை, மும்பை, கோல்கத்தாவில் உச்ச நீதிமன்ற கிளைகளை ஏற்படுத்தவும், தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும் என 3 கோரிக்கைகளை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் டெல்லிக்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேரில் அல்லத கணொலி வழியாக ஆஜராக முடியும். உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி முன்பு வழக்கறிஞர் மேலூர், விருதுநகரில் இருந்து கூட வாதங்களை எடுத்து வைக்க முடியும். அரசியலமைப்பு சட்டம் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நேரலை செய்யப்படுகிறது. இதை பார்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை தெரிந்து கொள்ளலாம். கற்றுக் கொள்ளலாம்.

கரோனா காலத்தில் காணொலி காட்சி வழியாக 2.62 கோடி வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 78 லட்சம் வழக்குகள் உயர் நீதிமன்றங்களிலும், 1.84 லட்சம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் 4,13,537 வழக்குகள் தீர்க்கப்பட்டன.

 

 

தமிழை வழக்காடு மொழியாக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருவேளை அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தேவைப்படலாம். ஆங்கிலம் நமது முதல் மொழி அல்ல. நமது தாய்மொழியிலேயே நாம் பயிற்றுவிக்கப்பட்டோம். சில வழக்கறிஞர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இளம் வழக்கறிஞர்கள் மொழியை ஒரு தடையாக பார்க்கக் கூடாது. அந்த வழக்கறிஞர்களை நீதிபதிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுகள் ஆங்கிலத்தில் இருக்கும்போது மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அதனை தங்கள் மொழியில் அறிந்து கொள்ள நாற்பது முதல் ஐம்பதாயிரம் வரை சந்தா செலுத்த வேண்டியதுள்ளது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட உத்தரவுகள் சரியாக உள்ளதாக என்பதை சரிபார்க்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுகள் அந்த மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். 1 கோடியே 11 லட்சத்து 685 உயர் நீதிமன்ற உத்தரவுகள் இணையதளத்தில் உள்ளன. இதில் 8.76 லட்சம் உத்தரவுகள் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. இந்த உத்தரவுகளை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தில் 6 பேர் உள்ளோம். நீதிபதிகள் நியமனம் குறித்து விவாதித்து வருகிறோம். தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு ஐந்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. இது போதுமானது அல்ல. இதனால் இளம் வழக்கறிஞர்கள் வேறு துறைகளில் பணிபுரியும் நிலை உள்ளது.

இளம் வழக்கறிஞர்களின் முதல் 2 ஆண்டுகள் கற்பித்தலுக்கான காலம். இன்றைய இளம் வழக்கறிஞர்கள் திறமையானவர்கள், எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அவர்களிடம் மூத்த வழக்கறிஞர்கள் உரையாட வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சட்டத்துறையில் பெண்களுக்கு போதுமான பங்களிப்பு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் 50 ஆயிரம் ஆண் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். 5 ஆயிரம் பெண் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளது. இது சட்டக்கல்வியில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படாததை தெரிவிக்கிறது.

பெண்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பல்வேறு பொறுப்புகளோடு பணியாற்றவரும் இளம் பெண் வழக்கறிஞர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குடும்ப பொறுப்பு காரணமாக பெண்கள் கூடுதல் நேரம் பணியாற்ற இயலாத நிலை உள்ளது.

குழந்தையை பராமரிப்பது குடும்பத்தை பராமரிப்பது ஆண் – பெண் இருவருக்கும் சமமானது. ஆனால் அது பெண்களுக்கான கடமை என சமூகம் அவர்கள் மீது சுமத்துகிறது. இதனால் பெண் வழக்கறிஞர்களை பணியமர்த்துவதில் தயக்கம் உள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகளும் வழங்கப்படுகின்றன. வழக்கறிர்களின் நியாயமான கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேசினார்.