புதுடெல்லி: இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு மூன்றாவது காலாண்டில் டாலருக்கு நிகராக 82 ஆக சரியும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அண்மையில் 79 ஆக சரிவடைந்தது. இந்தநிலையில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

 

 

 

இதுவரை இல்லாத அதிகபட்ச உயர்வாகும். வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். இந்தியாவின் ஜுன் மாத ஏற்றுமதி 16.8 சதவீதம் அதிகரித்து 3,790 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இது இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதியாகும். அதே நேரத்தில் இறக்குமதி 51.02 சதவீதம் அதிகரித்து 6,358 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.

முதல் காலாண்டில் பெட்ரோலியம் அல்லாத ஏற்றுமதி 11.9 சதவீதம் அதிகரித்து 9,250 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது. பெட்ரோலிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் 2022-23 முதல் காலாண்டில் ஏற்றுமதியில்india பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 முதல் 81 ஆக பலவீனமடையலாம் என்று இந்தியாவின் முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் அச்சம் தெரிவித்து இருந்தார்.

‘‘மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்தை தாண்டுவதை தடுக்க உதவும். ஆனால், இது ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் என்ற கவலை எழுகிறது’’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதுபோலவே மூன்றாவது காலாண்டில் டாலருக்கு எதிராக ரூபாய் 82 ஆக குறையும் என்று நோமுரா ஆய்வாளர்கள் கவலை கூறியுள்ளனர். இதனிடையே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிவடைந்தது.

இன்று பிற்பகல் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 79.17 ஆக சரிந்தது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை உயர்ந்ததால் ரூபாய் மதிப்பு சரிந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.