Site icon Metro People

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, 29-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. நாளை நடைபெறும் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.  பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் நாளை முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  44வது உலக சதுரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தைய்யா சாலையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நாளை மாலை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளை சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

எனவே, சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை நண்பகல் முதல் இரவு 9 மணிவரையில்  இராஜா முத்தைய்யாச் சாலை,  ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாமலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் இராஜா முத்தையச் சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து செண்ட்ர்ல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.

இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடஙக்ளைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version