திருச்சி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திருச்சி மாவட்டத்தில் பணிகள் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியவை தொடர்பாக திருச்சி – திண்டுக்கல் சாலையில் தாயனூர் கேர் கல்லூரியில் டிச.30-ல் (இன்று) நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், திமுகவினர் பங்கேற்க உள்ளனர்.

இதையடுத்து விழா நடைபெறும் நாளான டிச.30-ம் தேதி (இன்று) பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள், புறநகர் பேருந்துகள் அனைத்தும் அரிஸ்டோ ரவுண்டானா, மன்னார்புரம், சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக விராலிமலை, மணப்பாறை வழியாக திண்டுக்கல் சென்றடைய வேண்டும்.

திண்டுக்கலிருந்து திருச்சி வரும் கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள், புறநகர் பேருந்துகள் அனைத்தும் மணப்பாறை, விராலிமலை, மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மன்னார்புரம் வந்து, அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சல் நிலையம் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும்.

திண்டுக்கலில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, குளித்தலை சென்று, அங்கிருந்து கரூர்-திருச்சி சாலையில் ஜீயபுரம் வழியாக திருச்சிக்கு வந்து, சென்னை செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் கனரக, இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, விராலிமலை, பஞ்சப்பூர், புதுக்கோட்டை சுற்றுவட்ட சாலை வழியாக துவாக்குடி அடைந்து தஞ்சாவூர் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.