சென்னை: வாகனங்களில் அரசு நிர்ணயித்த அளவை விட பெரிதாக நம்பர் பிளேட்டுகள் பொருத்தி இருப்பவர்கள், தேவையற்ற வாசகங்களை வாகனங்களில் எழுதி இருப்பவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மனித உரிமை அமைப்புகளின் பெயரை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டதை அடுத்து இதுபோன்ற நடவடிக்கையிலும் தீவிர வாகன தணிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
சில தனியார் அமைப்புகள் மனித உரிமை என்ற பெயரை சேர்த்துக்கொண்டு தங்களை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளோடு அடையாளப்படுத்திக்கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்பான புகார்கள் குவிந்தன. அதனை தொடர்ந்து மனித உரிமை என்ற பெயரில் வாகனங்களில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றி வருவோர் மீது நடவடிக்கை எடுத்துவரும் போக்குவரத்து காவலர்கள் தேவையில்லாத மற்ற வாசகங்களை வாகனங்களில் ஸ்டிக்கராக ஒட்டியிருக்கும் நபர்கள் மீது அரசு நிர்ணயித்த அளவு எண்களின் நிறம், இடைவெளி, இருக்கும் விதிமுறைகளை பின்பற்றாமல் நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கின்றனர்.
அந்த வகையில் இதுவரை 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.