சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில், வன விலங்குகளைக் கையாள்வது தொடர்பாக பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா அருகில் பாம்பு பண்ணை இயங்கி வருகிறது. இங்கு ஊர்வன வகை உயிரினங்களான பாம்பு, முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருவாயின்றி, இப்பண்ணையில் பராமரிக்கப்படும் வன விலங்குகளுக்கு உணவு அளிக்க முடியாமல் இருந்தது. இதையறிந்த இந்தியன் ஆயில் நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.22 லட்சம் வழங்கியது.

அந்த நிதியில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 பழங்குடியின இளைஞர்களுக்கு, பாம்புகள் மற்றும் வன விலங்குகளை அடையாளம் காண்பது, அவற்றைப் பாதுகாப்பாக மீட்பது, பராமரிப்பது, பொதுமக்கள் பாம்புகளைக் கொல்வதைத் தடுத்து, சுற்றுசூழல் பாதுகாப்பில் பாம்பின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், மூலிகைத் தாவரங்களை இனம் கண்டறிதல், அவற்றின் பயன்கள், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், அந்த இளைஞர்கள் வன விலங்கு சார்ந்த சுற்றுலா கைடாக வேலைவாய்ப்பு பெறும் வகையில், வண்டலூர் உள்ளிட்ட உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளின் தனிச் சிறப்புகள், வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி 50 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும், இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கிய நிதியில், 50 எண்ணிக்கையில் பாம்புக் கடிக்கான முதலுதவி சிகிச்சைப் பெட்டிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களிடம் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை, பிரத்யேக வாகனமும் வழங்கப்பட்டுள்ளதாக பாம்பு பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.