அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அந்த வகையில், டெஸ்லா நிறுவனத்தில் இருந்து முன் அறிவிப்பு (நோட்டீஸ் பீரியட்) இல்லாமல் எண்ணற்ற ஊழியர்களை டெஸ்லா நிறுவனம் நீக்கியது. வேலையில் இருந்து ஊழியர்களை நீக்குவதற்கு முன்பாக முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற அமெரிக்க சட்ட விதிகளை இந்த நிறுவனம் மீறியிருக்கிறது என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் நெவாடா பகுதியில் உள்ள டெஸ்லாவின் ஜிகா தொழிற்சாலையில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ள இரண்டு ஊழியர்கள், நிறுவனத்தை எதிர்த்து டெக்சாஸ் நீதிமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கு தொடுத்தனர்.

நெவாடா தொழிற்சாலையில் இருந்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

60 நாள் நோட்டீஸ் பீரியட்

ஊழியர்களை மாபெரும் அளவில் பணிநீக்கம் செய்யும்போது 60 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க தொழிலாளர் நல சட்ட விதிகள் கூறுகின்றன. ஆனால், டெஸ்லா நிறுவனம் இதை கடைப்பிடிக்கவில்லை என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து முன்னாள் ஊழியர் ஒருவர் கூறுகையில், “ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுகின்றனர் என்று டெஸ்லா நிறுவனம் அறிவித்துவிட்டது’’ என்று தெரிவித்தார். டெஸ்லா நிறுவனத்தில் இருந்து மொத்தம் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்ற கேள்விக்கும், ஊழியர்கள் தொடுத்துள்ள வழக்கு குறித்தும் டெஸ்லா நிறுவனம் இதுவரையில் பதில் அளிக்கவில்லை.

கவலையில் உள்ள எலான் மஸ்க்

முன்னதாக டெஸ்லா நிறுவனம் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது என்று எலான் மஸ்க் வெளிப்படுத்தியிருந்தார். நெருக்கடியை சமாளிக்க சுமார் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் புலம்பி வரும் ஊழியர்கள்

டெஸ்லா நிறுவனம் தங்களை பணிநீக்கம் செய்தது குறித்து சமூக வலைதளங்களில் அந்நிறுவன ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். 60 நாட்களுக்கு உரிய இழப்பீட்டை டெஸ்லா நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.