பருவமழையைப் பேரிடராக மாற்றுவது நமது கவனக் குறைவு என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்தில் கரையைக் கடந்தது.

பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசியது. தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சென்னை தரமணியில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். ரொட்டி, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.

செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் கூறும்போது, “பருவமழை என்பது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு. பருவமழையைப் பேரிடராக மாற்றுவது நமது கவனக் குறைவே. அதற்காக அரசு மீது தவறு இல்லை என்று நான் கூறவில்லை. அரசு மீதும் தவறு உள்ளது.

அரசு மீது தவறு இல்லாமல் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. ஆனால், தனி மனிதர்களுக்கும் பொறுப்புள்ளது. இந்த பாதிப்பில் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். நீர் நிலைகளை ஆக்கிரமித்தலைக் குற்றமாகக் கருதி நாமும் அதைச் செய்யாமலிருக்க வேண்டும்.

பேரிடர்க் காலத்தில் நாங்கள் உ ட்பட அனைவரும் வந்து உதவி செய்கிறோம். மக்கள் சேவை செய்யும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றி” என்று கமல் தெரிவித்தார்.