திருத்தணியில் 108 ஆம்புலன்ஸில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. சாதுரியமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர் நூரி -அஸ்மா தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான அஸ்மாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

ஆகவே, 108 ஆம்புலன்ஸுக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து, திருத்தணி பகுதியில் இயங்கும் 108 ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர் அச்சரா, ஓட்டுநர் குமார் ஆகியோர், இஸ்லாம் நகர் விரைந்தனர்.

அங்கு அஸ்மா பிரசவ வலியில் துடித்ததையடுத்து, மருத்துவ உதவியாளர் அச்சரா சாதுரியமாக செயல்பட்டு, அஸ்மாவுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்தார்.

இதில், அஸ்மாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து, தலா 2.15 கிலோ எடையுள்ள இரு குழந்தைகள் மற்றும் தாய் அஸ்மா திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, தாயும்குழந்தைகளும் நலமாக உள்ளனர் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதுரியமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரை பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here