இந்த இரு படங்கள் தவிர எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனும் பரவலாக வெளியாகியுள்ளது. டிஜிட்டலில் தரம் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது. இதுவும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவைக்கும்.

தமிழக திரையரங்குகளை ஆகஸ்ட் 23 முதல் திறக்க அரசு அனுமதியளித்திருந்தாலும், செப்டம்பர் 3 ஆம் தேதி இன்றுதான் பெரும்பாலான திரையரங்குகள் ஊரடங்குக்குப் பின் தங்களின் கவுண்டர்களை திறந்துள்ளன. 

கொரோனா அச்சம் ஒருபுறம் என்றால், பல மாதங்களாக திரையரங்கு பக்கம் செல்லாமல், அந்த அனுபவத்தை கிட்டத்தட்ட மறந்துவிட்ட ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க அஜித், விஜய், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்களாலேயே முடியும். ஆனால், அப்படியொரு படம் தமிழில் இப்போதைக்கு வெளியாகப் போவதில்லை. இந்த கையறு நிலையில் திரையரங்குகளுக்கு கை கொடுத்துள்ளது இரு ஹாலிவுட் திரைப்படங்கள்.

முதல் படம் எஃப் 9. ரசிகர்களுக்கு முன்பே அறிமுகமானது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் சீரிஸின் ஒன்பதாவது பாகம். வின்டீசல், ஜான் சேனா நடித்துள்ள இந்தப் படம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளியாகி உலக அளவில் 700 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்துள்ளது. சீனாதான் இதில் அதிகம். இந்தப் படம் இன்று தமிழகம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

இன்னொரு திரைப்படம் ஷாங் – சி. சூப்பர் ஹீரோ திரைப்படம். இந்த இரண்டு படங்களின் பிரதான அம்சம் ஆக்ஷன் காட்சிகள். பிரமாண்ட திரையில் பார்த்தால் மட்டுமே முழு அனுபவம் தருபவை. அந்த அனுபவத்துக்காக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

இந்த இரு படங்கள் தவிர எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனும் பரவலாக வெளியாகியுள்ளது. டிஜிட்டலில் தரம் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது. இதுவும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவைக்கும்.

அடுத்த வாரம் விஜய் சேதுபதியின் லாபம் திரையரங்கில் வெளியாகிறது. அதுவரையான இடைவெளியை இந்த மூன்று படங்களும் சிறப்பாக நிரப்பும் என நம்பலாம்.