சென்னை: ‘இவ்வளவு பெரிய பட்டியல்’ தயார் செய்யப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக நேற்று அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், இருவரின் இடமாற்றம்தான் அதிக முக்கியத்துவம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்துறை, சுகாதாரத் துறை செயலர்கள் உட்பட 51 ஐஏஎஸ்அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி வணிக வரித் துறை ஆணையராக இருந்த கே.பணீந்திர ரெட்டி, உள்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த எஸ்.கே.பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.
கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராக உள்ள முகமது நசிமுத்தீன், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலராகவும், சுகாதாரத் துறை செயலராக உள்ள ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராகவும், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தீரஜ்குமார், வணிக வரித் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டனர்.
சுகாதாரத் துறை சிறப்பு அலுவலர் பி.செந்தில்குமார், அத்துறையின் செயலராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராகவும், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, ஊரக வளர்ச்சித் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதைபோன்று ஒரு சில மாவட்டங்களின் ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த இடமாற்றங்களில் எஸ்.கே.பிரபாகர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை இடமாற்றம்தான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
உள்துறைச் செயலர் எஸ்.கே.பிராபகர் கடந்த ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று பலரும் கூறுவார்கள். கடந்த காலத்தில் முதல்வராக இருந்தவருக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர். எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, இவர்தான் நெடுஞ்சாலைத் துறை செயலராக இருந்தார். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற உடன் இவரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்துறை செயலர் ஆனார்.
இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி வந்தவுடன் இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு முடிவு எடுத்துவிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக இந்த இடமாற்றம் தள்ளிப்போய்க் கொண்டுடிருந்தது. இறுதியாக நேற்று அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே சென்னையில் உள்ள அமைச்சர்களுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் சுமுக உறவு இல்லாமல் இருந்தது. எனவே, இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. ஆனால், கரோனா தொற்று காலத்தில் இவரின் பணியை பார்த்து உயர் நீதிமன்றம், இவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததது. இவ்வாறு ஒரு சில காரணங்களுக்காக இவரைப் பணியிட மாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ள காரணத்தால் இதுதான் சரியான நேரம் என்று இந்தப் பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த ஆட்சியில் இரண்டு பெரிய துறைகளை கவனித்து வந்து, இந்த ஆட்சி அமைந்த பிறகு இடமாற்றம் செய்யப்படாமல் இருந்த இவர்களை இடமாற்றம் செய்வதற்காகவும் இவ்வளவு பெரிய பட்டியல் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இருவர் உட்பட சிலரை மட்டும் தனியாக இடமாற்றம் செய்தால், அது பெரிய அளவு பேசுபொருளாக மாறிவிடும் என்பதால், விருப்பத்தின் பெயரில் இடமாற்றம் கேட்டவர்கள், ஏற்கெனவே முடிவு செய்துவைத்து இருந்தது என எல்லாவற்றையும் சேர்த்து இவ்வளவு பெரிய பட்டியலாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.