இந்தியாவில் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே வகையிலான டைப்-சி சார்ஜர் வேண்டும் என அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகையான சார்ஜிங் போர்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சியை முன்னெடுக்கும் வகையில் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் அந்த துறை சார்ந்த நிறுவனங்களை சந்திக்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.

விண்டோஸ் 11 லேப்டாப், டேப்லெட், ஐபோன், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என அனைத்து சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜிங் போர்ட்டை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு மற்றும் அது சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க விரும்புவதாக துறை சார்ந்த நிறுவனங்களிடம் இந்தக் கடிதத்தில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளதாம்.

LiFE: கடந்த நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டில் (CoP 26) பிரதமர் மோடி அறிவித்த சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை மந்திரமான LiFE கருப்பொருளின் அடிப்படையில் அமைச்சகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. அதோடு மின்னணு கழிவுகளை (e Waste) குறைக்கும் பொருட்டும் அமைச்சகம் இதனை கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ன? – பழைய மற்றும் புதிய ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்களுக்கு இடையே சார்ஜர்கள் பொருந்தாத காரணத்தால் நுகர்வோர்கள் புதிய போன்களை வாங்கும்போது, அதற்கென புதிதாக பிரத்யேக சார்ஜர் மற்றும் கேபிளை வாங்க வேண்டி உள்ளது. இது நுகர்வோருக்கு சிரமத்தை தருகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஒரே வகையிலான சார்ஜர் கேபிளை பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராய்வது அவசியமாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிகிறது. “டிஜிட்டல் சாதன உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதியில் இதனை சாத்தியத்திற்கு கொண்டு வந்துள்ளன. அதை ஏன் இந்தியாவிலும் செய்ய முடியாது?” என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐரோப்பா மாடல்! – கடந்த ஆண்டு சார்ஜிங் போர்ட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையம் ஒரு புதிய விதியை கொண்டு வந்தது. அதில் ஸ்மார்ட்போன் தொடங்கி அனைத்து வகையிலான மின்னணு சாதனங்களுக்கும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கட்டாயம் என தெரிவித்திருந்தது. இந்த விதி வரும் 2024 முதல் ஐரோப்பாவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.

அனைத்து சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் சாத்தியமா? – இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களான டாப் சாம்சங், சியோமி, ஒப்போ, விவோ மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்கள் டைப்-சி போர்ட்டுக்கு ஏற்கனவே மாறிவிட்டன. இந்த அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜிங் கேபிள்தான். ஆனால் அதன் பவர் அடாப்டரின் அவுட்புட் வோல்டேஜ் தன்மை மாறுபடுகிறது.

மறுபக்கம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் சார்ஜிங் போர்ட்களை மாற்ற வேண்டியுள்ளது. மேலும், ப்ரீமியம் மற்றும் 13 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் போன்கள்தான் டைப்-சி போர்ட் கொண்டுள்ளது. அதற்கு கீழ் விலை கொண்ட பெரும்பாலான புதிய போன்கள் மைக்ரோ யூ.எஸ்.பி-யை கொண்டுள்ளதாக தெரிகிறது. அதே போல ஸ்மார்ட்வாட்ச், இயர் பட்ஸ் போன்ற இன்னும் பிற சாதனங்களும் இந்த லிஸ்டில் உள்ளன.

இந்த ஒரே சார்ஜிங் போர்ட் அல்லது கேபிள் விவகாரம் விதியாக அல்லது உத்தரவாக பிறப்பிக்கப்படும்போது அனைத்து நிறுவனமும் அதற்கு ஏற்ற வகையில் மாற்றம் காண வேண்டியுள்ளது. மொத்தத்தில் இந்த முயற்சி சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்ற விஷயமாக உள்ளது.