ஐ.நா பாதுகாப்பு அவையில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்தியா, அப்படிச் செய்யாவிட்டால் அந்த அமைப்பு மதிப்பிழக்கும் என எச்சரித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு அவையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் மட்டும் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. மற்ற நாடுகளுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை. சர்வதேச அரசியலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் காரணமாக வீட்டோ அதிகாரத்தைப் பெற பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. குறிப்பாக இந்தியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் தங்களை ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்ப நாடுகளாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுத்தி வருகின்றன. எனினும், வீட்டோ அதிகாரத்தைப் பெற்றுள்ள நாடுகளின் அணுகுமுறை காரணமாக இதற்கான சீர்திருத்தம் தடைபட்டு வருகிறது.

இந்நிலையில், ஐ.நா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், “ஐ.நா பாதுகாப்பு அவை உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டும். ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இது நிகழாவிட்டால் ஐ.நா மதிப்பிழக்கும். ஜி20 போன்ற சர்வதேச அமைப்புகள் ஐ.நாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறும்.

ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கக்கூடிய நாடுகளில் சில, தங்களுக்கு இருக்கும் வீட்டோ அதிகாரம் வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என எண்ணுகின்றன. எனவே, சீர்திருத்தம் ஏற்படுவதை அவை விரும்பவில்லை. அதன் காரணமாகவே இந்த விவகாரம் சிக்கல் நிறைந்ததாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.