நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகரை பெங்களூருவில் தமிழகசிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

நீட் தேர்வில் கடந்த 2019-ம்ஆண்டு ஆள்மாறாட்டம் செய்துதமிழக மருத்துவக் கல்லூரிகளில் பலர் சேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவரும், அவரது தந்தையும் முதலில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இதுவரை 5 மாணவர்கள், அவர்களது பெற்றோர், 2 இடைத் தரகர்கள் என 17 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை தீவிரமடைந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக 10 பேரின்புகைப்படங்களை சிபிசிஐடி போலீஸார் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியிட்டனர். பெங்களூருவில் உள்ள ஆதார் ஆணையத்துக்கு அவற்றை அனுப்பி, அவர்கள் குறித்த விவரங்களை சிபிசிஐடி போலீஸார் கேட்டனர். ஆனால், அந்த புகைப்படங்கள் மூலமாக எந்த விவரமும் கிடைக்கவில்லை என்று ஆதார் ஆணையம் தெரிவித்தது. நீட் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் சிக்காததால் இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

இதற்கிடையில், ஆள்மாறாட்டம் செய்வதற்கு முக்கிய இடைத்தரகர்களாக செயல்பட்டதாக கேரளாவை சேர்ந்த ரசீத், மோகன் ஆகியோரை சிபிசிஐடிபோலீஸார் தேடி வந்தனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த ரசீத் கடந்த ஜனவரி மாதம் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த மோகன், விசா காலம் முடிவடைந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

தீவிர விசாரணை

மற்றொரு இடைத்தரகரான ஹர்சா தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்ததும், தமிழக சிபிசிஐடி போலீஸார் பெங்களூரு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஹர்சாவை நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை நேற்று சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆள்மாறாட்டம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது