மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

தலைநகர் டெல்லியிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நீதிபதிகள் என அரசு அமைப்புகளை அச்சுறுத்தும் வகையில் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் நாடாளுமன்றப் பணியாளர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில் தற்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனைத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், “கரோனா அறிகுறிகளை அடுத்து செய்த சோதனையில் எனக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டில் நான் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனவே, சமீபத்தில் என்னுடன் தொடர்புகொண்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.