பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2023 நிதியாண்டின் முதல் (ஜூன்) காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்தது.  இந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 9,478  கோடியாக உள்ளது. இது, கடந்த காலாண்டை விட 5.2% அதிகமாகும்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச மனிதவளத்துறையின் தலைவர் மிலந்த் லக்காட் ,” நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஜூன் 30ம் தேதியன்று, மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 606,331 ஆகும்” என்று தெரிவித்தார்.

பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று கூறிய அவர், நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும்  ஊழியர்களுக்கு 5 முதல் 8% வரை சம்பள உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், டிசிஎஸ் நிறுவனத்தில் அதிகப்படியான பணியாளர்கள் வெளியேறி (Attrition Rate) வரும் போக்கு காணப்படுகிறது. உதாரணாமாக, இந்த  காலாண்டில் பணியாளர்களின் வெளியேறும் விகிதம் 19.7% ஆக அதிகரித்துள்ளது. வெறும், 14,136  இளைஞர்கள் மட்டுமே  புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

சம்பள உயர்வு, கூடுதல் சலுகைகள், வீட்டில் இருந்து வேலை செய்யும் வழிமுறைகள், திறன் வளர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் டிசிஎஸ் யொட்டிய அசஞ்சர் சர்விஸ், விப்ரோ, காக்னிசென்ட் போன்ற போட்டி நிறுவனங்களில் டிசிஎஸ் பணியாளர்கள் சேர்ந்து வருகின்றனர். கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில், நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, ஐடி துறையில் பணியாளர்களின் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது.