மக்கள் மருந்தகங்களில் 90 சதவீதம் வரை மருந்துகள் விலை குறைவு என்பதால் மக்கள் முழுமையான பயன்படுத்திக்கொள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.

முத்தியால்பேட்டையில் உள்ள மக்கள் மருந்தகத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று காலை பார்வையிட்டார். அப்போது மருந்தகத்தில் உள்ள மருத்துவக் கருவி, உயர் ரக மருந்து வகை ஆகியவற்றை ஆளுநர் எடுத்துப் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மருந்தகம் மக்களுக்கு பயன் அளிக்கிறது என்பதற்காகவே இந்த வாரம் கொண்டாடப்படுகிறது. இன்று மக்கள் மருந்தகத்தை மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என நேரில் பார்வையிட்டேன்.

இங்கு ஒரு நோயாளி வாங்கிய மருந்து ஆயிரம் ரூபாய் இருக்கும். இங்கு அதன் விலை வெறும் 75 ரூபாய் மட்டுமே. மக்கள் மருந்தகத்தில் 90% வரை மருந்துகள் விலை குறைவு. மருத்துவர் என்பதினால் எனக்குத் தெரிகிறது. குளுக்கோ மீட்டர் 2500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இங்கு 550 ரூபாய். புரோட்டின் பவுடர் வெறும் 75 ரூபாய். வெளியில் 750 ரூபாய்க்கு விற்கிறது. மக்கள் மருந்தகங்கள் லாபத்திற்காக நடத்தப்படும் கடைகள் அல்ல.

மக்களின் நலனுக்காக, உடல் நலத்திற்காக நடத்தப்படுவது. அதனால் இதை பிரபலப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் முடிந்த அளவுக்கு மாத்திரைகள் தரப்படுகிறது. உயர் ரக ரத்த அழுத்த மாத்திரைகள், சில எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வெளியில் வாங்கிக் கொள்ள எழுதிக் கொடுக்கப்படுகிறது. அடிப்படையில் மருந்துகள் இவைதான். பெயர்கள் வேறு வேறாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.