சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்பட்ட 2 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஒரு வந்தே பாரத் ரயில் தயாராகி உள்ளது.
இந்த ரயிலை லக்னோவில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்வர். தொடர்ந்து, இந்த ரயிலின் சோதனை ஓட்டம் முடிந்தபிறகு, ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
உலக புகழ்பெற்ற ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ரூ.97 கோடியில் ரயில்-18 என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது.
மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு, ‘வந்தே பாரத் விரைவு ரயில்’ என்று பெயரிப்பட்டு புதுடில்லி – வாராணசி இடையேவும், புதுடில்லி-காத்ரா இடையேவும் இயக்கப்படுகிறது. சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாக இருப்பதால், இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
22 வந்தே பாரத் ரயில்கள்
இதையடுத்து, 44 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை ஐசிஎஃப், கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலியில் உள்ள நவீன பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், ஐசிஎஃப்-ல் மட்டும் 22 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.
முதல்கட்டமாக, 2 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், ஒரு ரயில் தற்போது தயாராகி உள்ளது. இந்த ரயில் இயக்கப்பட்டு, விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. மேலும், லக்னோவில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இது குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: ஐசிஎஃப்-ல் 16 பெட்டிகளைக் கொண்ட தலா 2 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு ரயில் தயாராகிவிட்டது. இந்த ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.முதல் வந்தே பாரத் ரயில் இந்த மாத இறுதியில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில், நவீன இருக்கை வசதிகளுடன் புதிய தொழில்நுட்ப மேம்பாடு கொண்டது. ஒரு ரயிலைத் தயாரிக்க சுமார் ரூ.110 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த ரயிலை, தென் இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ரயில் சென்னை-பெங்களூர் இடையே இயக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பு அம்சங்கள்
ஐ.சி.எஃப் தயாரித்துள்ள வந்தே பாரத் ரயிலில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்: முன்பு தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் 160 கிமீ வேகத்தை அடைய 146 விநாடிகள் ஆகின. இந்த ரயிலில் 140 விநாடிகளில் இந்த வேகத்தை அடைய முடியும்.
ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் அனைத்து மின்வசதிகளும் நின்று விட்டாலும், தனித்து இயங்கும் 4 அவசர கால விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நடைமேடை திசையில் பின்புறம் மற்றும் முன்புறத்தை கண்காணிக்கும் வகையில், 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெப்பம் மற்றும் குளிர் காற்று சீராக சென்று வர அதிசக்தி கொண்ட கம்ப்ரெசர் மற்றும் காற்றில் கிருமிகளை அழித்து சுத்தம் செய்து பெட்டியின் உள் அனுப்ப புறஊதா (Ultra Violet) விளக்குகள் இடம்பெற்றுள்ளன. தீ ஏற்பட்டால் அதை அணைக்க தீ உணர்வுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.பயணிகள் தகவல் அறிய முன்பிருந்து 24 அங்குல திரைக்கு பதிலாக, 32 அங்குல திரை வசதி செய்யப்பட்டுள்ளது.
ரயிலின் இயக்கம், கருவிகளின் செயல்பாடு மற்றும் குளிர் வசதியைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கட்டுப்பாட்டு அறையுடன் ஜிபிஎஸ் வசதி இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 4 அவசர கால வெளியேற்று ஜன்னல்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. ரயில் தடத்தில் நீர் இருந்தால் 400 மிமீ வரை தாக்குப் பிடிக்கும் நீர்காப்பு வசதிக்குப் பதிலாக, தற்போது 650 மிமீ வரை தாங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ரயிலின் இயக்குநர் மற்றும் காவலர் (Guard) ஆகியோரிடையே நேரடி உரையாடல் வசதி மற்றும் அதைப் பதிவு செய்யும் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரே தடத்தில் வரும் ரயில்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான ‘கவச்’ என்றழைக்கப்படும் ரயில் பாதுகாப்பு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கையின் கைப்பிடியிலும் பார்வையற்ற பயணிகளின் வசதிக்காக, பிரெய்லி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.