காபூலில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் கொன்றுவிட்டோம் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏராளமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானம் மூலம் காபூலில் உள்ளவர்களை மீட்டு வருகின்றன. காபூல் விமான நிலையத்துக்கு வெளியில் உள்ள பகுதிகள் முழுவதும் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால், விமான நிலையங்களுக்குள் பொதுமக்கள் நுழையாதபடி தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் தெரிவித்தார். இதேபோன்ற தகவலை பிரிட்டனும் வெளியிட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து கூடிய விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றைக்கு முந்தைய தினம் காபூல் விமான நிலையத்தின் வெளியில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து பேரோன் ஹோட்டல் அருகிலும் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 13 கொல்லப்பட்டுள்ளனர் என்று தொடக்க நிலையில் அடையாளம் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 150 பேர் குண்டு வெடிப்பால் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களைத் தேடி வேட்டையாடுவோம். இதனை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அமெரிக்க ராணுவ அறிவிப்பில், ‘ஆளில்லா விமானம் மூலம் காபூல் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு காரணமான இஸ்லாமிக் ஸ்டேட் கோரசன் குழுவின் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணத்தில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் எங்களது இலக்கை கொன்றுவிட்டோம். பொதுமக்கள் உயிரிழப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆப்கானிஸ்தானுக்கு வெளியிலிலிருந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.