உத்தராகண்டின் ஜோஷிமத் நகரில் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என்று ஜோதிர்மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வரதி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட மடங்களில் ஒன்று ஜோதிர்மடம். நாட்டின் வடக்கு திசையில் கேதார்நாத் அருகே அமைந்துள்ள இந்த மடம் ஜோஷிமத் என்று அழைக்கப்படுகிறது. இந்த மடத்தின் பெயராலேயே இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில்தான் தற்போது கட்டிடங்களிலும், நிலங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோதிர்மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வரதி, ”வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் இமயமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகளே இதற்குக் காரணம். ஜோஷிமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவின் கலாச்சார நகரமான இது தற்போது ஆபத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் உத்தராகண்ட் அரசு பாதுகாக்க வேண்டும்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இங்குள்ள நரசிங்க கோயிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள்தான் இந்த பாதிப்புகளுக்குக் காரணம். அரசு இதை முன்பே உணர்ந்திருக்க வேண்டும். தற்போதுதான் கவனிக்கிறார்கள். முதல்வர் தற்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஜோஷிமத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த பாதிப்புகளுக்கான உண்மையான காரணம் குறித்து கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐஐடி ரூர்கே, இஸ்ரோ ஆகிய அமைப்புகளிடம் இது குறித்து பேசி இருப்பதாகவும், அவர்கள் இந்த பாதிப்புகளின் பின்னணி காரணங்களை கண்டறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் இங்குள்ள மக்களின் பாதுகாப்புதான் மிக முக்கியம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

பிரச்சினை என்ன? – கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜோஷிமத் பகுதியில் 16,709 பேர் வசிக்கின்றனர். சுமார் 7,600-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக ஜோஷிமத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவெடிப்பு மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. 570 வீடுகளில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜோஷிமத் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறி வருகின்றனர். விரிவாக வாசிக்க