‘வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கிழக்கு ஐரோப்பாவுக்கு பயணிக்கவுள்ளது படக்குழு.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வெளிநாட்டில் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்க வேண்டியதிருந்தது. எப்போது படமாக்க, எங்கு கிளம்புவார்கள் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது கிழக்கு ஐரோப்பாவுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் கிளம்பவுள்ளது ‘வலிமை’ படக்குழு.

மிகக் குறைவான படக்குழுவினருடன் சென்று, அங்குள்ள நடிகர்களை வைத்து இந்த சண்டைக் காட்சியை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் பணிகளை ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் முடிக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இந்தப் பணிகள் அனைத்துமே முடிந்தவுடன், புதிய போஸ்டருடன் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவுள்ளார்கள். மேலும், டீஸர் குறித்த அறிவிப்பும் இருக்கும் எனத் தெரிகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.