இந்தியாவின் வளர்ச்சி வேகத்தையும் அளவையும் வந்தே பாரத் ரயில்கள் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேலும் 2 வந்தே பாரத் ரயில்களின் இயக்கம் இன்று துவக்கப்பட்டது. இதற்கான விழா மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி 2 வந்தே பாரத் ரயில்களையும் கொடி அசைத்து துவக்கிவைத்தார்.

ஒரு ரயில் மும்பையில் இருந்து சோலாப்பூர் வரையும், மற்றொரு ரயில் மும்பையில் இருந்து சாய்நகர் ஷீர்டி வரையும் இயக்கப்படுகிறது. மும்பையில் இருந்து சோலாப்பூருக்கு செல்ல தற்போதுள்ள அதிவிரைவு ரயில்கள் 7 மணி நேரம் 55 நிமிடங்களை எடுத்துக்கொள்வதாகவும், வந்தே பாரத் ரயில் இந்த தொலைவை 6 மணி 30 நிமிடங்களில் கடந்துவிடும் என்றும் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மிச்சமாகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.