திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள வரதராஜபுரம் ஊராட்சியில் கால்நடை கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு தெரு விளக்குகள் ஒளிர வைக்கப்படுகின்றன.

வரதராஜபுரம் ஊராட்சியில் 900-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊராட்சியில் 200-க்கும் அதிகமான குடும்பங்கள் கறவை மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. கறவை மாடுகளை வளர்ப்பவர்கள் தெருக்களிலும், குளம் குட்டை, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் மாடுகளின் சாணத்தைகொட்டி வந்ததால், வரதராஜபுரத்தில் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.

இந்த சுகாதார சீர்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ஊராட்சி நிர்வாகம், மாட்டுச் சாணத்திலிருந்து பயோ கேஸ் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, வரதராஜபுரம் ஊராட்சித் தலைவர் கலையரசு தெரிவித்ததாவது:

எங்கள் ஊராட்சியில் கால்நடை வளர்ப்போரால் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து யோசித்தபோது, நண்பர் ஒருவர் மூலம், மாட்டுச் சாணத்திலிருந்து, பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் குறித்து அறிந்தேன்.

ஆகவே அத்திட்டத்தை செயல்படுத்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

அதன்படி, 2019-20-ம் நிதியாண்டுக்கான மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி பொது நிதியில் இருந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், ரூ.60 லட்சம் செலவில் சமுதாய உயிர் எரிவாயு நிலையம் (பயோ-காஸ் தயாரிப்பு நிலையம்) அமைக்கப்பட்டு, கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டது.

சோதனை ஓட்டத்துக்குப் பிறகு, கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பயோ காஸ் தயாரிப்பு நிலையத்தில், நாள் ஒன்றுக்கு 500 கிலோ மாட்டுச் சாணம் மூலம் பயோ காஸ் தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் பயோ காஸை ஜெனரேட்டருக்கு அனுப்பி மின்சாரம் உற்பத்தி செய்கிறோம்.

தற்போது நாள் ஒன்றுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இதன் மூலம் ஊராட்சியில் உள்ள 200 தெரு விளக்குகளில், 100 தெரு விளக்குகள் இரவு முழுவதும் ஒளிர்கின்றன. நாங்கள் தயாரித்த மின்சாரம் மூலம் தெரு விளக்குகள் எரிவது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

படிப்படியாக பயோ காஸ் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் ஊராட்சியின் அனைத்து தெரு விளக்குகளும் ஒளிர நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுச் சாணத்திலிருந்து, மின்சாரம் மட்டுமல்லாமல்,இயற்கை உரமும் தயாரிக்கிறோம். அதை மாவட்டத்தில் இயற்கை விவசாயம்செய்யும் விவசாயிகள்பலர் வாங்கிச் சென்று, பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.