திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட தலை யராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவி ‘நீட்’ தேர்வு முடிவு பயத்தால் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று சென்றார். அங்கு சவுந்தர்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் நீட்டால் 17 மாணவர்கள் உயிரிழந்ததற்கு பாஜக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும். கல்வியை ஒத்திசைவு பட்டயலில் இருந்து மாற்றி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் பரவலான கோரிக்கையாக உள்ளது.
தமிழக அரசு ‘நீட்’ விலக்கு மசோதா நிறைவேற்றி அதை ஆளுநருக்கும் அனுப்பியுள்ளது. இதனை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விரைவில் ஒப்புதல் பெற வேண்டும்.
தற்போது, நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு ‘நீட்’ தேர்வு பாதிப்பு குறித்து சுட்டிக் காட்டியுள்ளது. ‘நீட்’ தேர்வு முரண்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளது. ‘நீட்’ தேர்வு பாதிப்பு தொடர்பாக, சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து 12 கட்சிகள் இணைந்து பரப்புரை மேற்கொள்ள உள்ளனர்.
சவுந்தர்யா குடும்பத்துக்கும் வி.சி.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளோம். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. ஒத்திசைவு பட்டியலில் இடம் பெற்றுள்ள துறைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம்.
அப்படி மாநில அரசின் சட்டத்தை அங்கீகரிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, திமுக கூட்டணி அல்லாத கட்சிகள், திமுகவுக்கு எதிரான கருத்தை சொல்கிறேன் என்பதற்கு பதிலாக அவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக பேச வேண்டும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். இந்த தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தென்னை மர சின்னத்திலும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாட்ச் சின்னத்திலும் போட்டியிடுவார்கள்’’ என தெரிவித்தார்.