கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த விலையில்லா மிதிவண்டிகள் இம்மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா கடந்த 2001-2002-ம் ஆண்டில் நடை முறைப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, 2005-2006-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் அனைத்து பிரிவு மாணவ, மாணவிகள், ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரிவுப்படுத்தியது.

இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து மாணவ, மாணவிகளும் பெரிதும் பயன்பெற்று வந்ததால் தமிழக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்ததால் பள்ளிகள் மூடப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயின்று வந்ததால் விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், 2021-2022-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு வழங்கு வதற்காக 6.18 லட்சம் மிதிவண்டிகளை தமிழக அரசு கொள்முதல் செய்து அதை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், ஒருங் கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 56 ஆயிரத்து 433 மிதிவண்டிகளை தமிழக அரசு மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பியுள்ளது. இந்த மிதிவண்டிகள் அந்தந்த மாவட்டங்களில் ‘பிடிங்க்’ (ஒன்று சேர்ப்பு) செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது, ‘‘தமிழகத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் மற்றும் ஐடிஐ படிக்கும் மாணவர்களின் வசதிக்காக தமிழக அரசு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2021-2022-ம் கல்வியாண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 84 அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 13,495 மாணவர்கள், ராணிப்பேட்டை மாவட் டத்தில் 73 பள்ளிகளில் 6 ஆயிரம் மாணவர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 58 பள்ளிகளில் 6,938 மாணவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 144 பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் என 56 ஆயிரத்து 433 மிதிவண்டிகள் மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் விலை யில்லா மிதிவண்டிகள் பிட்டிங்க் (ஒன்று சேர்ப்பு) பணிகள் 5 இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதாவது, வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் கே.வி.குப்பம் ஆகியபகுதிகளிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை, அரக்கோணம் மற்றும் ஆற்காடு ஆகிய3 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் என 3 இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 இடங்களில் மிதிவண்டிகள் பிட்டிங்க் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகள் அனைத்தும் 15 நாட்களில் முடிவு பெறும் என தெரிகிறது. இப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட பிறகு, இம்மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்கள் வழங்கப்படும்.’’ என்றனர்.