நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் லண்டன் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றாா். இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். 2019-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளியாக அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 65 வயதான விஜய் மல்லையா பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளார். இதனால் சட்ட ரீதியாக தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சாதக அம்சங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

அவா் நீதிமன்ற உத்தரவை மீறி தனது குழந்தைகளுக்கு 40 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.317 கோடி) பரிவா்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்ததாக மல்லையாவை குற்றவாளி என தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

 

 

இந்த வழக்கில் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை கடந்த மாா்ச் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு இன்று விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தது. நீதிபதிபகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது:

விஜய் மல்லையா தனது வாரிசுகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிவர்த்தனையை மேற்கொண்டார். நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்கான குற்றத்திற்காக விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையும் மற்றும் ரூ.2 ஆயிரம் அபராத தொகை செலுத்த வேண்டும்.

இதுதவிர 4 வாரங்களுக்குள் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகையை வட்டியுடன் அவர் திருப்பி செலுத்த வேண்டும். அதனை செய்ய தவறும் பட்சத்தில் அது அவரது சொத்துகள் முடக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.