விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘வாரிசு’ படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கியவுடனேயே முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், ‘‘சங்கராந்தி பண்டிகை அன்று வெளியாகும் நமது தெலுங்கு கதாநாயகர்களது படங்களான ‘வீர சிம்ஹா ரெட்டி’, ‘வால்டர் வீரய்யா’ ஆகிய படங்களை முதலில் தியேட்டரில் பாருங்கள்.
இதன் காரணமாகதான் நாங்கள் ‘வாரசுடு’ படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளோம். பட வெளியீடு தள்ளிப்போவதால் நிச்சயம் தெலுங்கு வெர்ஷனின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்பது பாதிப்படையாது. படத்தின் எமோஷன்கள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆகும். தமிழ்நாட்டில் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.