வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு (ஆக. 01) கோவை வந்தார். அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். இன்றும், நாளையும் கட்சியினர் உள்ளிட்டோரைச் சந்திப்பதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் இன்று (ஆக. 02) காலை மனு ஒன்றை அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கமல் கூறும்போது, “கிராம சபைக் கூட்டங்களை நடத்தக் கோரி மனு அளித்துள்ளோம். கடந்த 2020 ஜனவரிக்குப் பின்பு கிராம சபைக் கூட்டம் நடக்கவே இல்லை என்பதுதான் எங்கள் குறை. அதை மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளோம்.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம். தமிழக நிதிநிலை அறிக்கையில் கிராம சபைகளுக்கு எனத் தனி நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும்” என்றார்.

அப்போது, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.