விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்க செயினை விழுங்கி விட்டு காட்டுப் பகுதியில் வீசியதாக நாடகமாடியவரின் வயிற்றை ஸ்கேன் செய்து போலீஸார் கண்டறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், அவர் அணிந்திருந்த தங்கச் செயினை திடீரென பின்னால் இருந்து பறித்தனர். அப்போது அன்னலட்சுமி சுதாரித்துக் கொண்டு டூவீலரில் இருந்தவாறு செயினை பிடித்துக் கொண்டு திருடர்களுடன் போராடினார். இதில் செயினின் ஒரு பகுதி திருடர்களின் கையிலும் மற்றொரு பகுதி அன்னலட்சுமி கையிலும் சிக்கியது.

செயினை பறித்த திருடர்கள் இருசக்கர வாகனத்தில் பறந்தனர். அப்போது காவல் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் பின்னால் விரட்டிச் சென்று சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் காட்டுப்பகுதியில் செயின் பறிப்பு திருடர்களை மடக்கிப் பிடித்தார். பின்னர் நடந்த விசாரணையில் செயின் பறித்தவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் என்பது தெரிய வந்தது.

அப்போது அவர்கள் அன்னலட்சுமியிடமிருந்து பறித்த செயினை காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்தனர். காட்டுப் பகுதியில் பல மணி நேரம் தேடியும் செயினை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் முத்துப்பாண்டியின் வயிற்றை தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் செய்து பார்த்தனர். இதில் முத்துப்பாண்டியின் வயிற்றில் தங்கச் செயின் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி செய்து செயின் வெளியே எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.